கோலாலம்பூர், அக் 15: நேற்று பிற்பகலில் ஏற்பட்ட புயலுடனான கனமழையால், சிலாங்கூரில் அமைந்துள்ள தெலோக் பங்லிமா காராங்கில் உள்ள பல பொதுக் கட்டடங்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, சிலாங்கூர் மற்றும் கோலா லங்காட் மாவட்ட பொதுப்பணி துறை (ஜே.கே.ஆர்) குழுக்கள், சம்பந்தப்பட்ட கட்டடங்களில் அமைப்புசார் ஆய்வு மற்றும் பாதுகாப்பு நிலை மதிப்பீடு மேற்கொண்டு வருகின்றன.
சிஜங்காங் ஜெயா தேசியப்பள்ளியின் கூரை புயலால் சேதமடைந்துள்ளதாகவும், அதன் கட்டடம் முழுமையாக பாதுகாப்பானதாக உறுதி செய்யப்படும் வரை வகுப்புகளை இடைநிறுத்தும்படி JKR பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியதாகவும் பொதுப் பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இதற்கிடையில், ஜே.கே.ஆர் சிலாங்கூரின் மின்பொறியியல் பிரிவு (CKE), பாதிக்கப்பட்ட கட்டடங்களில் உள்ள மின்சார அமைப்புகளைச் சோதனை செய்து வருவதாகவும், இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார விபத்துகளைத் தவிர்க்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதோடு, சமீபத்தில் பயன்படுத்த தொடங்கிய புதிய வகுப்பறை தொகுதியில் சிறிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும், அதில் கூரையின் பாதுகாப்பு மூடியில் ஏற்பட்ட சேதத்தை ஒப்பந்ததாரர் உடனடியாக பழுது செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் மற்றும் மேலும் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடுகளை ஜே.கே.ஆர் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விரைவாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் நந்தா லிங்கி கூறினார்.