புத்ராஜெயா, அக் 15 - அண்மையக் காலமாக, மாணவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கட்டொழுங்கு மற்றும் பள்ளிப் பாதுகாப்புப் பிரச்சனைகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மேலும், மாணவர்களிடையே நிலவி வரும் இந்தக் கவலைக்கிடமான நிலை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"ஆனால், இக்குற்றச் செயல்களில் பெரும்பாலானவை தொலைப்பேசிகள், திறன்பேசிகள் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளுடன் தொடர்புடையவை. எனவே, இவைகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்க இன்று அல்லது நாளை நான் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவேன். பல்வேறு எதிர்வினைகள் இருந்தாலும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார் அவர்.
பள்ளிக்கூடங்களில் விதிமுறைகள் இருந்தாலும், இக்குற்றச்செயல்களுக்கு முக்கிய காரணம் தொலைப்பேசியின் பயன்பாடும் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கமே காரணம் ஆகும் என்று பிரதமர் விளக்கினார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய, இப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெர்னாமா