ஷா அலாம், அக் 15 – உலு சிலாங்கூர் நகராண்மை கழகம், KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) நிறுவனத்துடன் இணைந்து, மாவட்டத்தில் உள்ள கழிவுப்பொருள் சேகரிப்பு பகுதிகளை 34இலிருந்து 45ஆக அதிகரித்துள்ளது.
உலு சிலாங்கூர் மாவட்டத்தில், தினமும் 5,000 முதல் 6,000 மெட்ரிக் டன் வரை திடக்கழிவுகள் உருவாகுவதால், சேகரிப்பு பிரிவுகளை விரிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக எம்.பி.எச்.எஸ் தலைவர் ஜுலைஹா ஜமாலுடின் கூறினார்.
"இந்த ஒப்பந்தம், சிலாங்கூர் மாநிலத்தின் PISPPANS 2024–2033 திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்துள்ளது. ஒப்பந்தத்தின் ஆண்டு மதிப்பு RM18.7 மில்லியன் ஆகும்," என அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 45 புதிய Roll-On Roll-Off (RORO) லாரிகள் சேகரிப்புப் பணிக்காக வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லாரியும் ஒரே நேரத்தில் 7.5 மெட்ரிக் டன் வரை கழிவுகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
இந்த திட்டம் செப்டம்பர் 1 முதல் 2032 ஆகஸ்ட் 31 வரை செயல்படும் என்றும், லாரிகள் வாங்குவதற்காக RM9 மில்லியன் செலவு செய்யப்பட்டதாகவும் KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ’ ரம்லி முகமட் தாஹிர் தெரிவித்தார்.
முந்தைய வருடம், மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி PISPPANS திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, சிலாங்கூரை சுத்தமான மற்றும் வாழ்வதற்கேற்ற மாநிலமாக மேம்படுத்துவது முக்கிய நோக்கமாகக் குறிப்பிட்டார்.