கோலாலம்பூர், அக் 15 - மலேசியாவிற்கு வருகை புரியும் 2026 ஆண்டை முன்னிட்டு தனிநபர் வருமான வரியில், ஆயிரம் ரிங்கிட் வரை சிறப்பு விலக்கு 2026 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் பயணம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும்.
இந்நடவடிக்கை உள்நாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ரிங்கிட் மதிப்பு வலுபெற்றிருப்பதைத் தொடர்ந்து, வெளிநாட்டு சுற்றுலா அதிகரித்துள்ள போக்கை இந்த முயற்சி வழி மீண்டும் சமநிலைப்படுத்த முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அண்மையில் ஏறக்குறைய இரண்டு லட்சம் மலேசியர்கள் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றது மற்றும் ஐந்து கோடி ரிங்கிட் வரையில் அங்கு செலவிட்டது குறித்து தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ த்சே அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அதேவேளையில் லங்காவி போன்ற பிரபலமான சுற்றுலாத் தளங்களில் தங்குமிடம் மற்றும் உணவின் விலை உட்பட உள்நாட்டு சுற்றுலாவின் விலை உயர்வு குறித்தும் பிரதமர் கவலை தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அவ்விவகாரம் தொடர்பில் ஆராய, இரண்டாவது நிதியமைச்சரும் கெடா மாநில மந்திரி புசாரும் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதை அன்வார் சுட்டிக்காட்டினார்.