ஷா அலாம், அக் 15 – பாண்டார் உத்தாமாவில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் 16 வயது மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல, மாறாக சமூக ஊடக உள்ளடக்கங்களின் தாக்கம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
14 வயது சந்தேகநபரும் உயிரிழந்த மாணவியும் இந்தச் சம்பவத்திற்கு முன் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை மற்றும் அவர்களுக்கிடையே எந்தவிதமான தொடர்பும் காணப்படவில்லை என்றும் சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஷசெலி கஹார் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“தொடக்க விசாரணையில், இது பகடிவதையால் ஏற்பட்டதாக தெரியவில்லை. சந்தேகநபரும் மாணவியும் முற்றிலும் பழக்கம் இல்லாதவர்கள் எனத் தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தன்று, இருவரும் தனித்தனியாக கழிப்பறைக்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளனர். பின்னர், சந்தேகநபர் குறிப்பிட்ட மாணவியை பின்தொடர்ந்து பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக காவல்துறைக்கு கிடைத்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
மார்புப் பகுதி மற்றும் கழுத்தில் பல கத்தி குத்துக் காயங்களுடன் அம்மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலமுறை கத்தியால் குத்தியதுதான் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என மருத்துவப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இச்சம்பவத்தில்ஒரு கத்தி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தாக்குதலுக்குப் பிறகு, சந்தேகநபர் அதே இடத்தில் பயந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் ஒருவர் அவரை மடக்கிப் பிடித்து உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்தார். சந்தேகநபரிடமிருந்து பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தி கைப்பற்றப்பட்டது.
காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், அந்தக் கத்தி இணையம் வழி வாங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், எந்த தளம் வழியாக வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தேகநபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 57 பேரிடம், அதாவது ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலோசகர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, இருவரின் பின்னணியும் கவனமாக பரிசோதிக்கப்படுகிறது. சந்தேகநபரின் மனநிலை மதிப்பீடு விரைவில் நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.
“இச்சம்பவத்தால் இரு குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தனியுரிமையை மதிக்க பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று டத்தோ ஷசெலி தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான தவறான தகவல்கள் மற்றும் படங்களைத் தடுக்க SKMM (மலேசிய தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம்) உடன் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.