கோலாலம்பூர், அக் 15 - எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள சாலை போக்குவரத்து துறையின் (ஜே.பி.ஜே.) அமலாக்க அதிகாரிகள், உடல் கேமராக்களை (Body-Worn Cameras – BWC) பயன்படுத்த தொடங்குவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார்.
இத்தகைய நடவடிக்கை, சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மற்றும் பொது நம்பிக்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
முதல் கட்டமாக 100 கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளதுடன், இதற்காக RM2.3 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜே.பி.ஜே கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்தோணி தெரிவித்தார்.
"இது ஆபத்து மற்றும் அபாயகரமானது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த நடவடிக்கையை ஒருங்கிணைந்த முறையில் உறுதியாகவும் துணிச்சலாகவும் மேற்கொள்ள வேண்டும்," என்றார் அவர்.
களத்தில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவு செய்யப்பட்டு புறநிலையாக மதிப்பிடப்படுவதை உறுதிசெய்ய, ஆதாரம் அடிப்படையிலான அமலாக்கத்தைச் செயல்படுத்துவதற்கான ஜே.பி.ஜே.வின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி காட்டுவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பெர்னாமா