கோலாலம்பூர், அக் 15 – பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நிகழ்ந்த, மாணவி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, கல்வி அமைச்சகம் முழுமையான, வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணை நடைபெறுவதற்காக ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இச்சம்பவத்தில் 14 வயதுடைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகளுடன் அமைச்சகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனக் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
“உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். இதை தாங்கும் மனதளவான சக்தியும் பொறுமையும் இறைவன் வழங்கட்டும்,” என்றார் அவர்.
மேலும், இச்சம்பவம் நடந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தைக் கையாள உதவ, ஆலோசகர் மற்றும் உளவள ஆசிரியர்களைக் கொண்ட குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“இந்தச் சம்பவத்தின் பின்னணி இன்னும் விசாரணை உள்ள நிலையில் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் விரைவில் மேல் தகவல்களை வெளியிடுவார்,” என தெரிவிக்கப்பட்டது.