பெட்டாலிங் ஜெயா, அக் 14: எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களிலும் முழு இயங்கலை அல்லது (Hybrid) பகுதி இயங்கலை வாயிலாக வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த தளர்வு அரசாங்கப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகக் கல்லூரிகள் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். இதன் மூலம், இந்து மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியை மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியும்.
இத்தீர்மானம், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் நடத்திய ஆலோசனைகளின் பின்னர் எடுக்கப்பட்டது. இது, மலேசியாவின் பன்முக இன சமூகத்தில் நல்லிணக்கத்தை வளர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும், இந்த நடைமுறை ஒவ்வொரு கல்வி நிறுவனத்தின் கல்வி கட்டமைப்பு மற்றும் விருப்பத்திற்கேற்ப அமல்படுத்தப்படும். மேலும், கல்வி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வேளையில் மாணவர்கள், கல்வி நிர்வாக ஊழியர்கள் மற்றும் இந்து சமயத்தினருக்கு தீபாவளி வாழ்த்தினை அமைச்சு தெரிவித்து கொண்டது.