காப்பார்,அக்டோபர் 14: வெல்லம், பருப்பு கலந்த இனிப்பு வாசம் வீசும் போது, அந்த வீட்டு பக்கம் செல்லும் யாருக்கும் குழந்தைப் பருவ நினைவுகள் மனதில் எழுந்து விடும். இது சாதாரண பலகாரம் அல்ல “கெட்டி உருண்டை”. ஒவ்வொரு தீபாவளிக்கும் சுவையாகவும், உறவின் பாசத்தோடும் கலந்த இந்த பாரம்பரிய பலகாரம் இன்னும் சில குடும்பங்களின் சமையலறைகளில் உயிருடன் வாழ்கிறது.
சுங்கை காப்பாரில் வசிக்கும் 75 வயது ருக்கு பாட்டி, இன்றும் அந்த பாரம்பரிய பலகாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார். “நான் சிறு வயதிலிருந்து கெட்டி உருண்டை செய்து வருகிறேன். முதலில் என் வீட்டில் கற்றுக்கொண்டேன். கல்யாணம் ஆன பிறகு என் மாமியார் வீட்டிலும் இதையே தொடர்ந்தேன். ஆனால் அவர்கள் தான் இன்னும் சிறந்த பாரம்பரிய முறையில் செய்ய கற்றுத்தந்தார்கள்,” என்று கூறினார்.

“கெட்டி உருண்டை என்றால் அது ஒரு இனிப்பு மட்டும் அல்ல, அது நினைவுகள் நிரைந்த பலகாரம் என்று கூறினார் ருக்கு பாட்டி. வெல்லம், அரிசி மாவு, திருவிய தேங்காய், வறுத்த வேர்க்கடலை, பாசிப் பருப்பு, பொட்டுகடலை, ஏலக்காய் என இந்த அனைத்து பொருட்களும் சேரும் போது வீட்டில் ஒரு புது சந்தோஷம் உருவாகும்.”

மேலும் பாட்டி பாரப்பரியமாக செய்யும் வழிமுறையை மீடியா சிலாகூர்ருடன் பகிர்ந்தார். முதலில் வெல்லத்தை சிறிது அளவு தண்ணீரில் உருக்கி, அதில் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திருவிய தேங்காய், வறுத்த பருப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிரகு வருத்து வைத்த அரிசியை கல்லில் பொட்டு மாவாக அரைக்க வேண்டும். வெல்லம் சரியான “கட்டி” நிலைக்கு வந்ததும், அதை கலவையில் ஊற்றி விரைவாக கைகளால் உருண்டையாக உருட்ட வேண்டும். வெல்லம் அதிகமாக குளிர்ந்துவிட்டால் உருட்ட முடியாது என்பதால் அதற்கான நேரம் முக்கியம். இதுதான் நம்ம பாரம்பரிய கெட்டி உருண்டை இனிப்பு சுவையோடு குடும்ப பாசம் கலந்து உருவாகும் ஒரு மரபு இனிப்பாகும்.

கரைத்த வெல்லம் சரியான பதத்தில் உள்ளதா என பார்ப்பது ஒரு கலைதான் என்று அவர் பெருமையாக கூறினார். “நான் வெல்லம் உருகி வந்தவுடனே கொஞ்சம் நீரில் போட்டு பார்ப்பேன். அது திடமாக ஆகும் போது தான் சரியான பதத்தில் இருக்கும். சில நேரம் வெல்லம் குளிர்ந்துவிட்டால் மீண்டும் அடுப்பில் சூடுக்காட்ட வேண்டும்,” என ருக்கு பாட்டி சிரித்தபடி கூறினார்.
அவரது சமையலறையில் நிகழும் ஒவ்வொன்றும் ஓர் அனுபவம். “ஒரு தடவை வெல்லம் கொதிக்கும்போது கொஞ்சம் என் கையில் சிந்தி விட்டது. பிறகு கைவலி இருந்தாலும், அதை விட்டுட்டு போகாமல் . என் பேரன்களும் குழந்தைகளும் என்னுடன் இனைந்து கெட்டி உருண்டையை பிடிக்க உதவினார்கள் என்று நினைவு கூர்ந்தார்.
“வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். யூடியூப் வீடியோ பார்ப்பது நல்லதுதான், ஆனால் பாரம்பரிய கைவண்ணம் அதுதான் உண்மையான சுவை என்று ”இன்றைய இளைஞர்களுக்காக அவர் மனமார்ந்த வேண்டுகோள் விடுத்தார்.
தீபாவளி காலத்தில் ருக்கு பாட்டியின் வீடு இனிப்பின் வாசத்தால் நிரம்பி இருக்கும். யார் வந்தாலும், “கொஞ்சம் கெட்டி உருண்டை எடுத்துக்கோங்க” என்று சொல்வார். “மதம், இனம் என எந்த வித்தியாசமுமில்லை. என் கெட்டி உருண்டை சுவைத்தாலே எல்லாருக்கும் பிடிக்கும்,” என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.

இதனுடன் பாட்டியின் நினைவில் இன்னும் பசு மரத்தாணிப் பொல் இருக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள். “அப்போழுது நாங்க எல்லோரும் சேர்ந்து வீட்டு வாசல் துடைப்போம். பிறகு இனிப்புகளை மற்றும் அன்பு பகிர்ந்த காலம் அது. இப்போ அப்படி இல்லை. ஒவ்வொருத்தரும் தத்தம் உலகத்தில் மூழ்கி விட்டார்கள்” என்று மனம் கலங்கிய குரலில் பகிர்ந்தார்.
இன்றைய வேகமான உலகத்தில் பாரம்பரியம் மறைந்து போகிற சமயத்தில், ருக்கு பாட்டி போன்றோர் நமக்கு அதை நினைவூட்டுகிறார்கள். தீபாவளியின் ஆனந்தம் ஒளியில் மட்டும் அல்ல, குடும்ப பாசத்தில், பாரம்பரிய சுவைகளில், மனதை இணைக்கும் அந்த இனிப்புகளில் தான்.
“எல்லோரும் அன்போடும், பாசமோடும் தீபாவளி கொண்டாடணும். என் கெட்டி உருண்டை போல இனிமையாக வாழணும்,” என்று ருக்கு பாட்டி புன்னகையுடன் கூறி முடித்தார்.