கோத்தா கினபாலு, அக் 14: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் வியாழக்கிழமை தொடங்கி அக்டோபர் 22ஆம் தேதி வரை பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்வுச்செலவுத் துறை அமைச்சர் டத்தோக் அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.
இத்திட்டம், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலைத்தன்மையை உறுதி செய்வதையும் நுகர்வோர்களை முறையற்ற விலை உயர்வுகளிலிருந்து பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என SICC எனப்படும் சபா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்ட எலும்புகள் கொண்ட ஆட்டிறைச்சி, தக்காளி, சிவப்பு மிளகாய், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், ROS வகை வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம், ஆஸ்திரேலிய பருப்பு, தேங்காய் போன்ற பொருள்கள் அதிகபட்ச விலைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என்று அவர் விவரித்தார்.
மக்கள் எளிதாக கண்டறியும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து பொருள்களிலும் இளஞ்சிவப்பு நிற விலை பட்டியல் ஒட்டப்பட்டிருப்பதாகவும், முழுமையான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடும் படியும், அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
பெர்னாமா