ஷா ஆலம், அக் 14 - சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு கிள்ளானில் அமைந்துள்ள செட்டி பாடாங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு மாலை 6.00 மணி தொடங்கி நள்ளிரவு 11.00 மணி வரை நடைபெறும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
இந்த உபசரிப்பில் 5,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெறும் இந்த உபசரிப்பு நிகழ்வில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் வருகையாளர்களுக்கு கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அறுசுவை உணவுகளுடன் கூடிய விருந்துபசரிப்பும் நடைபெறும்.
இந்த பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆலயங்களின் பொறுப்பாளர்களிடம் மாநில அரசின் மானியத்தை வழங்கும் அங்கமும் அடங்கும்.
மேலும், ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா சார்பாக தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களும் வழங்கப்படும்.
எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 145 பேருக்கு இந்நிகழ்வில் வர்த்தக உபகரணங்கள் வழங்கப்படும் என பாப்பாராய்டு குறிப்பிட்டார்.