கோலாலம்பூர், அக் 14 - இவ்வாண்டு தாபோங் காசே ஹாவானா நிதியுதவி திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான, சுமார் பத்து லட்சம் ரிங்கிட் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 300 பெறுநர்கள் எனும் இலக்கை இத்திட்டம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு மட்டும் நாடு முழுவதும் சுமார் 275 ஊடகவியலாளர்கள் தாபோங் காசே ஹாவானா உதவியைப் பெற்று பயனடைந்துள்ளதாக தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். 8 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட்டிற்கு கூடுதலான நிதியின் வாயிலாக குறிப்பிட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை மொத்தம் 532 ஊடகவியலாளர்களுக்கு 15 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.
இந்தப் புள்ளிவிவரங்களில் 220,000 ரிங்கிட் பங்களிப்புடன் 74 தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். இன்று வரை 2025-ஆம் ஆண்டிற்கு 132,000 ரிங்கிட் பங்களிப்புடன் 44 தமிழ் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர் தியோ நீ சிங் விளக்கினார்.
இன்று திங்கட்கிழமை விஸ்மா பெர்னாமாவில் 2025-ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற தாபொங் காசே ஹாவானா நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.