புத்ராஜெயா, அக் 14: இந்த ஆண்டிற்கான தேசிய அளவிலான தீபாவளி மடாணி திறந்த இல்ல உபசரிப்பு எதிர்வரும் அக்டோபர் 18ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள Lot F, கே.எல். சென்ட்ரலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 5,000-க்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விழா, டிஜிட்டல் அமைச்சகம் தலைமையில், தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் மலேசியா பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மின்னணு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அவர்கள் பங்கேற்று நிகழ்வை சிறப்பிக்கவுள்ளனர்.
"மடாணியின் ஒளி, ஒருமைப்பாட்டின் சுடரொளி" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழா, தீபாவளி என்பது ஒளியின் பண்டிகை என்பதைக் குறிப்பதுடன், அந்த ஒளியின் நம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் உணர்வையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.
இவ்விழாவின் கருப்பொருளில் உள்ள "மடாணியின் ஒளி" என்பது, மலேசியா மடாணி கொள்கையின் இரக்கம் (இக்சான்), நலத்தோடு வாழ்தல் மற்றும் மனிதநேயம் ஆகிய மதிப்புகளை எடுத்துரைக்கின்றது. அதனுடன் "ஒருமைப்பாட்டின் சுடரொளி" என்பது, ஒளியின் மூலம் உருவாகும் இன ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை உணர்த்துகிறது.
இந்த தேசியத் திறந்த இல்ல உபசரிப்பு மலேசியா மடாணி கொள்கையை மக்கள் மத்தியில் வலியுறுத்தும் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புப் பொதுநிகழ்வாகும். இது மக்கள் மத்தியில் பரஸ்பர மதிப்பும், ஒற்றுமையும், கலாச்சார நெருக்கமும் வலுப்பெறும் ஒரு தளமாகும்.