கிள்ளான்: அக் 13 ;-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகையாளர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் அதேவேளையில் கிள்ளான் லிட்டில் இந்தியாவில் தீபாவளி ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த முதன் முறையாக ஜாலான் தெங்கு கிளானா, கிள்ளான் லிட்டில் இந்தியாவின் முன்புறத்தில் ராட்சத நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது.
இன்று அக்டோபர் 13ஆம் தேதி மாலை வேளையில் இந்த ராட்சத நுழைவாயிலைக் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார், டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் பின் ஹுசைன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
தீபாவளி முன்னேற்பாடுகளில் மக்கள் தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில் இந்த ராட்சத நுழைவாயில் கிள்ளான் லிட்டில் இந்தியாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், கிள்ளான் லிட்டில் இந்தியாவில் உள்ள கடைகளையும் அவர் பார்வையிட்டதோடு பொதுமக்களிடம் அளவளாவினார்.
இந்த நிகழ்ச்சியில் கிள்ளான் எம்.பி வீ.கணபதிராவ், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், கிள்ளான் அரச மாநகர் மன்ற இந்திய உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.