ஷா ஆலாம், அக்டோபர் 13: கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இயங்கும் ஏரோட்ரெயின் சேவை கடந்த ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் தொடங்கியதிலிருந்து தற்போது 100 சதவீத செயல்பாட்டு நிலையில் உள்ளது.
டெர்மினல் 1 இல் உள்ள ஏரோட்ரெயின் திட்டம் தற்போது இரண்டு ஆண்டு காலம் கொண்ட குறைபாடு பொறுப்பு காலத்தில் உள்ளது. அதே நேரத்தில், இயந்திர மற்றும் சிக்னல் அமைப்புகள் முழுமையான நிலைத்தன்மையை அடைய சீரமைப்பு கட்டத்தில் உள்ளதாக துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார் .
சேவை தொடங்கிய ஜூலை 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 வரை, ஏரோட்ரெயின் சேவையின் செயல்திறன் 99.19 சதவீதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 வரை மற்றும் அக்டோபர் 5 முதல் 10 வரை, 100 சதவீத செயல்திறன் பதிவு செய்யப்பட்டது என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.
ஏரோட்ரெயின் மேம்படுத்தல்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தொழில்நுட்ப அதிகாரிகள் ரயிலில் எந்தவொரு கோளாறும் உடனடியாக சரி செய்யப்படுவதை உறுதி செய்கிறார்கள் என்றார் அவர். மீண்டும் கோளாறு ஏற்பட்டால் தயாரிப்பு நிறுவனத்துக்கு அரசு இழப்பீட்டு நடவடிக்கை எடுக்கும் எனவும் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றத் தவறினால், அதிகபட்சமாக மாதத்திற்கு RM190,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.