கோலாலம்பூர், அக் 13 - மலாய் மொழி என்பது வெறும் தொடர்பு கருவியாக மட்டும் பார்க்கக்கூடாது. இது நாட்டின் மீது உள்ள விசுவாசத்தை பிரதிபலிக்கும் ஒன்றாகும் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
தேசிய மொழி ஒரு நாட்டின் அடையாளமாகவும், ஒருமைப்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை உருவாக்கும் கருவியாகவும் இருப்பது அவசியம் என்றார் அவர்.
மலாய் மொழியில் நிபுணத்துவம் அரசாங்கத்தின் நீண்டகாலக் குறிக்கோளாக இருந்து வருகிறது. ஏனெனில், அது அனைத்து மலேசியர்களுக்கும் உரிய பொதுவான அடையாளத்தை உருவாக்க உதவுகிறது. இது நாட்டில் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலாய் மொழியின் பயன்பாட்டை வலுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதி செய்தார்.
மலேசியாவில் உள்ள சில சர்வதேச பள்ளிகள் மலாய் மொழியை கற்பிக்காதது தேசிய மொழி சட்டம் 1963/67 (Act 32) மற்றும் அரசியலமைப்பின் 152வது பிரிவுக்கு முரணாக உள்ளது என்றார்.
Dewan Bahasa dan Pustaka (DBP) ஏற்பாடு செய்த 2025 தேசிய மொழி மாதத் தொடக்க விழாவில் உரையாற்றும் போது அமிருடின் இவ்வாறு கூறினார்.
தேசிய மொழி விழா மலாய் மொழியைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், மொழிக்கான மரியாதையையும் அன்பையும் வளர்க்கவும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இது நாட்டின் பன்முக சமூகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு சின்னமாகவும் அமைய வேண்டும்.
மலாய் மொழியின் நிலையை வலுப்படுத்த, அதை பொருளாதாரம் மற்றும் படைப்பாற்றல் துறைகளில் — குறிப்பாக இசை, இலக்கியம், திரைப்படம், மற்றும் அனிமேஷன் போன்ற துறைகளில் அரசாங்கம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என அமிருடின் சொன்னார்.
சிலாங்கூர் மாநில அரசு தனது அனைத்து அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளிலும் தேசிய மொழி சட்டத்தைக் (Act 32) கடைப்பிடித்து வருகிறது. இதில் சாலைகள், இடங்கள் மற்றும் பொது குறியீடுகள் போன்றவற்றின் பெயரிடலும் அடங்கும் என்றார்.