ஷா ஆலம், அக் 13 – மலாக்கா, அலோர் காஜா பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில், மூன்றாம் படிவ மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நான்கு ஐந்தாம் படிவ மாணவர்கள் உடனடியாகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த முடிவு பள்ளியின் ஒழுங்குமுறை மற்றும் நெறி ஆணையத்தின்தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
இதனை மலேசியா கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஆசாம் அகமட் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
"பள்ளி நிர்வாகம் மற்றும் நெறிக் குழு, சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்குப்பின், நான்கு மாணவர்களையும் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளது" எனக் கூறினார்.
அந்த மாணவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை பள்ளியில் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள், மாறாக கல்வி அமைச்சால் ஏற்பாடு செய்யப்படும் இடத்தில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
மாவட்டக் கல்வி அலுவலகம் (PPD) மற்றும் மாநிலக் கல்வித் துறை (JPN) ஆகியவற்றின் நேரடி கண்காணிப்பில் தேர்வு நடைபெறும். மாணவர்களின் அடையாளங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும். அனைத்துப் தேர்வு நடவடிக்கைகளும் மலேசிய தேர்வு வாரியம் (LPM) வெளியிட்ட நடைமுறைகளுக்கு இணங்கச் செயல்படுத்தப்படும்.
மேலும், இந்த மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர விரும்பினால், மற்ற கல்வி நிறுவனங்களில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் முன்பு கல்வி பயின்ற பள்ளியில் மீண்டும் சேர்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பள்ளியின் ஒழுங்கையும், மாணவர்களின் நலத்தையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட முறைசார்ந்த முடிவாகும்.
"எஸ்.பி.எம். தேர்வை எழுத அனுமதிக்கப்படுவதால் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பது அல்ல. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை, எந்த நபரும் குற்றமற்றவர் எனக் கருதப்படுவதே கல்வி அமைச்சின் கொள்கை. இது, கல்வியும் சட்டமும் சமநிலை கொள்ளும் முக்கியக் கோட்பாடாகும்" எனக் கூறினார்.