கோலாலம்பூர், அக் 13: குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குழுக்களை (B40 மற்றும் M40) ஆதரிக்க, வீட்டு உத்தரவாதத் திட்டம் (SJKP) மூலம் RM21.5 பில்லியன் மதிப்புமிக்க மொத்தம் 90,779 கடன்களுக்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒப்புதல் பெற்ற கடன்களில் 89.56% 40 வயதுக்கும் குறைவான இளம் மலேசியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவர்களில், சுமார் 15,000 பேர் 18–25 வயது, 31,000 பேர் 26–30 வயது, 22,356 பேர் 31–35 வயது, மற்றும் 12,799 பேர் 36–40 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும் வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அய்மான் அதிரா சாபு கூறினார்.
ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப் கேட்ட, நிலையான வருமானமில்லாத தொழிலாளர்கள், குறிப்பாக கிக் பொருளாதாரத் துறையிலுள்ளவர்கள், எவ்வாறு சுயமாக வீடுகளை வாங்க முடியும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, இந்த திட்டம் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வாய்ப்பாக இருப்பதாக அதிரா சாபு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்தும், 2026ம் ஆண்டுக்கான கூட்டரசுப் பட்ஜெட்டில், SJKP திட்டத்தை மேலும் RM20 பில்லியன் உத்தரவாதத்துடன் விரிவுபடுத்தும் திட்டத்தை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
இந்த விரிவாக்கம், முதன்முறையாக வீடு வாங்கும் மேலும் 80,000 குடும்பங்களுக்கு நிதி உத்தரவாதம் வழங்கும் என்பதோடு, கிக் மற்றும் சுயதொழிலாளர்களுக்கும் நேரடி நன்மையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அதிரா சாபு.
மக்களுக்கு உதவும் நோக்கில், மக்கள் வீடு திட்டம் (PPR) மற்றும் மக்கள் குடியிருப்பு திட்டம் (PRR) போன்ற திட்டங்களில் வாடகைக்கு பிறகு சொந்தமாக்கும் (Rent-to-Own) திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு நிலையான குடியிருப்பு இருப்பதை உறுதி செய்யும் ஒரு தொடக்கமாக அமைகின்றன.