ஷா ஆலம், அக் 13 - இந்தியாவில் தோன்றிய பாரம்பரிய விளையாட்டான கபடி, இன்று உலகளாவிய அளவில் விரிவடைந்து வருகிறது. மலேசியாவிலும், இந்த விளையாட்டு கடந்த சில ஆண்டுகளில் பெரிதும் வளர்ச்சி பெற்று, பொதுமக்கள் மத்தியில் அறிமுகமும் பிரபலமும் அடைந்துள்ளது.
இந்திய சமூகத்தில் மட்டுமே பரவலாக விளையாடப்பட்ட கபடி, இப்போது அனைத்து இனங்களை சேர்ந்த மக்களாலும் வரவேற்கப்படுகின்றது. இது மலேசியாவின் பன்முக சமூகத்துக்கிடையில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு தளமாக திகழ்கிறது என கபடி பயிற்றுநர் பாலமுருகன் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
கபடி விளையாட்டின் நிர்வாகப் பணி மலேசிய கபடி பேரவை (Kabadi Federation of Malaysia - KFM) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பு ஆசிய மற்றும் உலகக் கபடி கூட்டமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
மலேசியாவில் கபடி விளையாட்டின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த, அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டு கொண்டார். அதாவது, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கபடியை அதிகாரப்பூர்வ விளையாட்டாக அறிமுகப்படுத்தி, இளம் வயதில் இருந்தே மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
மாநில அளவில் விளையாட்டு மையங்கள் (sports academies) மூலம் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் உயர்தர பயிற்சி வசதிகளை வழங்க வேண்டும். அதனுடன், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான தொடர்ச்சியான போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் வீரர்களுக்கு போட்டிப் பண்பை வளர்க்கலாம். மேலும், கபடியில் ஈடுபடும் வீரர்களுக்கான மாணவ உதவித்தொகைகள், ஊக்கத்தொகைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
சுக்மா மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தொழில்முறை பயிற்சி, மருத்துவ வசதி மற்றும் மனநல ஆலோசனை போன்ற முழுமையான ஆதரவு வழங்கப்பட வேண்டும். கபடியை தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பர வாயிலாக அறிமுகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம், கபடி மலேசிய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி, மேம்பாடு காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.