ஷா ஆலம், அக் 13 - கபடி என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பாரம்பரிய விளையாட்டாகும். இது தமிழ்நாட்டில் “சடுகுடு” என்ற பெயரால் அறியப்படுகிறது. கபடி வெகுவாக வளர்ச்சியடைந்ததுடன், இன்று உலகளாவிய அளவிலும் பரவியுள்ளது.
1936ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கபடி அறிமுகமாக, அதன் பின்வரிசையில் 1990 முதல் ஆசிய விளையாட்டுகளின் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. இந்தியா, பங்களாதேஷ், ஈரான், தென்னாசிய நாடுகள் மற்றும் இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் கூட கபடி விளையாடப்படுகிறது.
அதன் வரிசையில் மலேசியாவிலும் கபடி விளையாட்டு பிரபலமடைந்து வரும் நிலையில் கபடி பயிற்றுநர் பாலமுருகனை மீடியா சிலாங்கூர் பேட்டி கண்டது. அதில் அவர் கபடி பற்றி பல விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் முதலில் கபடி எப்படி விளையாடுவது என விளக்கினார். கபடி போட்டியில் இரண்டு அணிகள் பங்கேற்கும் நிலையில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மைதானத்தில் விளையாடுவார்கள். மேலும், ஒவ்வொரு அணிக்கும் 5 வரை மாற்று வீரர்கள் இருக்கலாம்.
ஒரு அணியின் வீரர் (ரெய்டர்) எதிரணி பகுதியிற்குள் சென்று, எதிரி வீரர்களை தொட வேண்டும். அதே சமயம் தன்னை யாரும் தொடாமல் காப்பாற்றிக் கொண்டு மீண்டும் தனது பகுதுக்குள் திரும்ப வேண்டும். இந்நேரத்தில் அந்த வீரர் ``கபடி கபடி`` என சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
மேலும், எதிர் அணி வீரர்கள், அந்த ரெய்டரை தங்கள் பகுதியிலேயே தடுத்து பிடித்து அவுட் செய்ய முயலுவர். அவர்கள் வெற்றிகரமாக ரெய்டரை பிடித்தால், அந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
ஆனால், ரெய்டர் ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை தொட்டு வெற்றிகரமாக தனது பகுதியிற்கு திரும்பினால், அவருடைய அணிக்கு ஒவ்வொரு தொடுதலுக்கும் ஒரு புள்ளி கிடைக்கும். தொடப்பட்ட வீரர்கள் "அவுட்" ஆகி விளையாட்டிலிருந்து தற்காலிகமாக வெளியேறவேண்டும் என்றார்.
இந்த விளையாட்டு இரண்டு பகுதிகளாக நடைபெறும், ஒவ்வொரு பகுதியிலும் ஆட்டம் 20 நிமிடங்கள் தொடரும். 40 நிமிடங்கள் முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.
அதுமட்டுமில்லாமல், எதிர் அணி மைதானத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்கள் உள்ளபோது, ரெய்டர் 'போனஸ் லைன்'ஐ கடந்தால் கூடுதல் ஒரு புள்ளி கிடைக்கும்.
இதனை தொடர்ந்து, கபடியின் பல சிறப்பு அம்சங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். கபடி என்பது உபகரணங்கள் பயன்படுத்தாமல் ஓர் இடத்தை இரண்டு பகுதிகளாக மட்டுமே பிரித்து விளையாடுவதாகும்.
அதுமட்டுமில்லாமல், உடலுறுதி, வேகம், திட்டமிடல், மற்றும் குழு ஒத்துழைப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மிகவும் சவாலான விளையாட்டாகும்.
அதுமட்டுமில்லாமல், பல விளையாட்டுகளின் கலவையாகவும் கபடி திகழ்கிறது. அதாவது, தற்காப்பு விளையாட்டு, ரக்பி, காலா பஞ்சாங் மற்றும் குஸ்தி ஆகியவற்றின் கூறுகளை ஒன்றிணைந்து விளையாடுவதுதான் கபடி என்றார் பாலமுருகன்.