ஈப்போ, அக்டோபர் 12: பொருளாதாரம், அறிவுசார் மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டின் விளையாட்டுத் துறை செயல்படுவதை உறுதி செய்யும் வேளையில், அரசாங்கம் அத்துறைக்குத் தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கும்.
விளையாட்டுத் துறைக்கான வெற்றிக்குப் பங்களிப்பவர்களைப் பாராட்டுவதோடு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவுடன் இணைந்து அத்துறையின் தேவைக்கு தாம் உதவவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"நிச்சயமாக, ஹன்னா யோவும் நானும் எங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவ முயற்சிப்போம். சிறியது முதல் பெரியது வரை. இந்த நாடு பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் முன்னேற விரும்புவதால் சாத்தியமான அனைத்தையும் செய்வோம்", என்று பிரதமர் கூறினார்.
சனிக்கிழமை, பேராக் ஈப்போவில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு தினத்தைத் தொடர்க்கி வைத்து உரையாற்றும் போது பிரதமர் அவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ சாரானி முஹமட் மற்றும் ஹன்னா யோவும் கலந்து கொண்டனர்.
ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்று பல்வேறு உடற்பயிற்சி நடவடிக்கைகளை உட்படுத்திய இந்நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் பங்கேற்றனர்.
-- பெர்னாமா