கூச்சிங், அக்டோபர் 12 - 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சரவாக் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் 600 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு, மத்திய அரசாங்கத்திற்கும் அம்மாநிலத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் மடாணி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் இந்த ஒதுக்கீடு, மாநில வளர்ச்சி மீதான அக்கறையை நிரூபித்திருப்பதாக சரவாக் முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஒபெங் தெரிவித்தார்.
''வரவு செலவுத் திட்டத்தில் 600 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை வழங்கியதற்காக மத்திய மடாணி அரசாங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக, இது மடாணி அரசாங்கத்திற்கும் சரவாக் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்'', என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை, கூச்சிங்கில் நடைபெற்ற சரவாக் மாநில ஆளுநர் துன் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபாரின் 79-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அபாங் ஜொஹாரி அவ்வாறு கூறினார்.
வெள்ளி அன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சபா மாநிலத்திற்கு 690 கோடி ரிங்கிட்டையும், சரவாக் மாநிலத்திற்கு 600 கோடி ரிங்கிட்டையும் பிரதமர் அறிவித்தார்.
-- பெர்னாமா