ஶ்ரீ இஸ்கண்டார், அக்டோபர் 12 : அக்டோபர் 26-ஆம் தேதி, ஆசியானின் முழு உறுப்பினராக திமோர்-லெஸ்டே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.
திமோர்-லெஸ்டேவை நிரந்தர உறுப்பினராக ஏற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கு வெளியுறவு அமைச்சின் மூலம் மலேசியா முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆசியான் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் அதை ஆதரித்தோம். ஆனால் அண்மைய காலமாக ஆசியானின் நிரந்தர உறுப்பினராக திமோர்-லெஸ்டே ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதி செய்ய நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மேலும் வெளியுறவு அமைச்சின் ஒத்துழைப்புடன், அக்டோபர் 26-ஆம் தேதி திமோர்-லெஸ்டே அதிகாரப்பூர்வமாக நிரந்தர உறுப்பினராக அங்கத்துவம் பெறும்”, என்றார் அவர்.
சனிக்கிழமை, பேராக் ஶ்ரீ இஸ்கண்டார், பெட்ரோனாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்களுடனான Temu Anwar நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்வார் அவ்வாறு கூறினார்.
அக்டோபர் 26 முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் சீ ஜின்பிங் உட்பட ஆசியான் நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
-- பெர்னாமா