நிபோங் திபால், அக் 11: நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுநோய்களின் பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவதை கல்வி அமைச்சு ஊக்குவித்து வருகிறது. இதன் நோக்கம் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களையும் பாதுகாப்பது ஆகும்.
கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுத்தம் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அல்லது நிலையான செயல் நடைமுறை (SOP) ஒன்றை ஒருங்கிணைத்துள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சீடெக், தெரிவித்தார்.
இதுவரை சில பள்ளிகளில் இன்ஃப்ளூயன்ஸா நோய்த் தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன, ஆனால் நிலைமை இன்னும் கட்டுக்குள் உள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் விழிப்புடன் இருந்து SOP-ஐ பின்பற்றி, தொற்றுநோய் பரவலைத் தடுக்கவும் பள்ளி சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
“மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம், ஏனெனில் பள்ளி சமூகம் மிகப் பெரியது. எனவே, மாணவர்களோடு ஆசிரியர்களின் நலனும் கவனிக்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து SOP-ஐப் பின்பற்றுவது அவசியம்,” என்று அவர் கூறினார்.
இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரித்தால் பள்ளிகளை மூடும் வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பபட்ட போது, அவர் கூறியதாவது, SOP அடிப்படையில், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்ட பிறகே பள்ளிகளை மூடும் முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.