கோலாலம்பூர், அக் 11 – மலேசிய இந்திய சமூகத்தின் நலனையும் பொருளாதார வலிமையையும் மேம்படுத்தும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல முக்கிய முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் RM2 பில்லியன் மதிப்புள்ள ரஹ்மா உதவி தொகை, தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 18, 2025 முதல் வழங்கப்பட உள்ளது. இது பண்டிகை காலத்தில் மக்களின் சுமையை குறைக்கும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
அதேபோல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு டோல் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்கும் நடவடிக்கை, குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வீட்டுக்கு திரும்பும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அதோடு, சாரா நிதியுதவி எனப்படும் RM100 தொகை 2.2 கோடி மலேசியர்களுக்கு வழங்கப்படுவது, வாழ்க்கைச் செலவின் அழுத்தத்தை சமாளிக்க மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் முயற்சியாகும். இந்திய சமூகத்திற்கான ரஹ்மா உதவி தொகை மற்றும் சாரா நிதியுதவி ஒதுக்கீடு RM600 மில்லியனிலிருந்து RM1 பில்லியனாக உயர்த்தப்பட்டிருப்பதும், அரசின் உண்மையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
மேலும், முன்னாள் தோட்டத் தொழிலாளர்களை உட்பட இந்திய சமூகத்திற்கான வீட்டு கடன் உத்தரவாதம் மற்றும் நிதி உத்தரவாத முயற்சிகள், வீட்டு சொந்த உரிமையை ஊக்குவிக்கும் முக்கியமான படியாகும் எனவும் அவர் பாராட்டினார். இதனுடன்,கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் என்பது சமூக நலனுக்கான அரசின் தொடர்ந்து காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
மலேசியாவின் அனைத்து இனங்களும், குறிப்பாக இந்திய சமூகமும், நாட்டின் முன்னேற்றத்தில் பின்தங்காதவாறு செயல்படும் பிரதமர் அன்வார் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அக்கறைக்கு தங்களின் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.