ஷா ஆலம், 11 அக்டோபர்: மடாணி 2026 பட்ஜெட் பூர்வீக குடி மக்களின் முன்னேற்றத்திற்கான அரசின் உறுதிப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. “Leave No One Behind” என்ற நிலையான வளர்ச்சி இலக்கு கொள்கைக்கு ஏற்ப, பூர்வீக சமூகத்தின் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு RM412 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. இது பூமிபுத்ரா நிதி ஒதுக்கீட்டில் இருந்து தனித்ததாகும் என்று சிலாங்கூர் மாநிலத்தின் பூர்வீக்குடி மக்கள் விவகாரங்களையும் வறுமை ஒழிப்பு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், பூர்வீகக்குடி கிராமங்களில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்காக RM155 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு, தொலைதூரப் பகுதிகளில் வாழும் சமூகங்களுக்கு பொருளாதார மற்றும் சமூக அணுகல் வாய்ப்புகள் விரிவடையும் என்றார் அவர்.
கல்வி துறையில், பூர்வீகக் கிராமங்களில் உள்ள பாலர் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக சுமார் RM13 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு புதிய பாலர் பள்ளிகள் கட்டப்படும். அதில் இரண்டு சிலாங்கூரின் கோம்பாக் (Kampung Uli Kuang) மற்றும் கோலா லாங்காட் (Kampung Taman Desa Kemandol) ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
பிரதமர் அவர்களின் தலைமைத்துவம் வெறும் பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்ல, மக்களின் சக்தியூட்டலும் சமூக நீதி நிலைநாட்டலும் மையமாகக் கொண்டுள்ளது. இது உண்மையான மலேசியா மடாணி ஆவணத்தின் பிரதிபலிப்பாகும் என்று அவர் கூறினார்.