கோலாலம்பூர், அக்10: நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் RM700 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது அறிவித்தார்.
இந்த மொத்தத் தொகையில், சரவாக் குனுங் முலு தேசியப் பூங்கா, பேராக் லெங்கோங் பள்ளத்தாக்கு மற்றும் சிலாங்கூரில் உள்ள FRIM வனப் பூங்கா ஆகிய யுனெஸ்கோ தளங்களைப் புதுப்பித்தல் உட்பட சுற்றுலா வசதிகளை மேம்படுத்த RM25 மில்லியன் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
மேலும், ‘2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டை’ (Visit Malaysia Year 2026) வெற்றிகரமாக நடத்த RM500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் promotion, சந்தைப்படுத்தல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய RM60 மில்லியன் ஊக்க நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
“கலை, கைவினைப்பொருட்கள், பாட்டிக் மற்றும் நெசவு போன்ற பாரம்பரியத் துறையில் உள்ள தொழில்முனைவோரின் வருமானத்தை ஆதரிக்க RM50 மில்லியன்-ம், மலேசியாவிற்கு சர்வதேச மற்றும் சார்ட்டர் விமானங்களை ஊக்குவிக்க RM50 மில்லியன் பொருத்தமான மானியமாகவும் வழங்கப்படும். MAHB (மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்) பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஹாங்காங் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜியாங்சி ஏர் உட்பட 10 சர்வதேச நிறுவனங்களை மலேசியாவிற்கு ஈர்க்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.
மலேசிய சுகாதார சுற்றுலா கவுன்சிலால் முன்னெடுக்கப்படும் சுகாதார சுற்றுலாத் திட்டங்களைத் தீவிரப்படுத்த மேலும் RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.