ஷா ஆலாம், அக் 10: மடாணி அரசாங்கத்தின் கீழ் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு, மலேசிய சுங்கத் துறை ஆகிய அமலாக்க நிறுவனங்கள் சுமார் RM15.5 பில்லியன் மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் மற்றும் அபராத வருவாயை மீட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளில் RM15.5 பில்லியன் மதிப்பிலான கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டிருக்கிறோம் என்பதையே இதன் சான்றாகக் கொள்ளலாம் என்று 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சமர்ப்பித்தபோது பிரதமர் இதனை கூறினார்.
அதே நேரத்தில், நிதி அமைச்சராகவும் உள்ள அன்வார், அமலாக்க அமைப்புகளின் திறனை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு RM700 மில்லியனுக்கும் மேற்பட்ட ஒதுக்கீட்டுடன் பயிற்சி மற்றும் சொத்து வாங்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மேலும் சுங்கத் துறை வரி முத்திரை போலி செய்வதைத் தடுக்க டிஜிட்டல் வரி முத்திரை அறிமுகப்படுத்துகிறது. அதோடு, நாட்டின் நுழைவுக் கட்டுப்பாட்டு மையங்களில் கண்காணிப்பு முறைகள் நிறுவப்படவுள்ளன. அடுத்த ஆண்டு முழுவதும் மின்னணு விலைப்பட்டியல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் வரி இணக்கம் வலுப்பெறுவதோடு, மீதமுள்ள வரி திருப்பித் தரும் செயல்முறையும் விரைவாகும்.
அதே நேரத்தில், லாங்காவி மற்றும் லபுவானில் வாகன வரி விலக்கு RM300,000க்கு கீழ் மதிப்புள்ள வாகனங்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும் என அரசு திட்டமிட்டுள்ளது.