வாஷிங்டன், அக். 10 - தனது போர்நிறுத்தத் திட்டத்தின் கீழ் காஸாவை விட்டு வெளியேற யாரும் நிர்பந்திக்கப்பட மாட்டார்கள் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஒப்பந்தம் "அனைத்தும் இறுதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். இது நேர்மாறானது. நாங்கள் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பாலஸ்தீனர்கள் காஸாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுமா என்று ஒரு நிருபர் கேட்டபோது டிரம்ப் இவ்வாறு கூறினார்.
காஸா போர்நிறுத்த ஒப்பந்தம் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வார இறுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்ய தாம் திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.
இது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிணைக்கைதிகள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை திரும்பி வருவார்கள் என்று நினைக்கிறேன். நான் அநேகமாக அங்கு இருப்பேன் என்று நம்புகிறேன். ஞாயிற்றுக்கிழமை வாக்கில் நாங்கள் புறப்பட திட்டமிட்டுள்ளோம். அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று அவர் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காஸாவிற்கான தனது போர் நிறுத்த திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.
காசாவிற்கான 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை அவர் கடந்த செப்டம்பர் 29ஆம் வெளியிட்டார். சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவித்தல், நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் முழு பகுதியிலிருந்தும் இஸ்ரேலிய படைகள் படிப்படியாக திரும்பப் பெறுதல் ஆகியவை அதில் அடங்கும்.
ஹமாஸின் பங்கேற்பு இல்லாமல் காஸாவில் ஒரு புதிய நிர்வாக முறையை உருவாக்குவது, பாலஸ்தீனர்கள் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் துருப்புக்களைக் கொண்ட ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்குஸது மற்றும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவது ஆகியவற்றை இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.