கோலாலம்பூர், அக் 10 – சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், 13வது மலேசியத் திட்டத்தின் (RMK13) கீழ் சிலாங்கூரில் வெள்ளத் தணிப்பு முயற்சிகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் முக்கியமான திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களின் வளர்ச்சித் திட்ட முன்னுரிமைகளைப் புரிந்துகொள்ள மாநிலத் தலைவர்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். "அனைத்து மாநிலங்களின் கோரிக்கைகளும் RMK13 திட்டமிடலில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன," என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட முக்கிய திட்டங்களில்:
சுங்கை பூலோ வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்
பந்திங் மருத்துவமனைக்கு ஒரு கூடுதல் கட்டிடம் கட்டுவது
வெள்ளத்தைக் கட்டுப்படுத்த இயந்திர மற்றும் மின்சார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது
பத்து 9 சந்திப்பு முதல் ஜாலான் டத்தோ அலியாஸ் சந்திப்பு வரையிலான கூட்டரசு சாலையை மேம்படுத்துவது (இதில் உலு லங்காட், செராஸில் உள்ள பத்து 9 சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டுவதும் அடங்கும்)
கின்றாராவில் ஒரு வகை 2 சுகாதார கிளினிக்கை உருவாக்குவது ஆகியன அடங்கும்