கோலாலம்பூர், அக் 10 – மலேசியாவின் பொருளாதாரம், 2026ஆம் ஆண்டில் 4 முதல் 4.5 விழுக்காடு வரை மிதமான வளர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று 2026ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தெரிவித்தார்.
இந்த முன்னறிவிப்பு, அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி மதிப்பீடு (4 முதல் 4.8 விழுக்காடு) அடிப்படையில் அமைந்ததாகும். நாட்டின் பொருளாதார அடித்தளம் திடமாக உள்ளதனால், பல்வேறு பன்னாட்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் மலேசியாவுக்கு உள்ளது.
உலகளாவிய வரி தடைகள் மற்றும் பிராந்திய முரண்பாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்துக்கு சவால் அளிக்கின்றன என்றாலும், மலேசியா வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்வதில் திறன் வாய்ந்ததாகவே இருக்கிறது என்றார்.
“மலேசியா மேற்கொள்ளும் அமைப்புசார் மறுசீரமைப்பு, உலகமெங்கும் நிலவும் நிதி மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கிடையிலும் பொது நிதி மேலாண்மையில் பொறுப்புணர்ச்சி அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.”
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற முக்கிய அமைப்புகளும், மலேசியாவின் பொருளாதாரம் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளன. உலகம் சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலும், மலேசியாவுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பு சிறப்பாகவே தொடர்கிறது.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், மலேசியா 4.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இது அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சி, உள்ளூர்த் தேவையின் வலிமை, தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பில் நிலைத்தன்மை ஆகியவற்றால் அமைந்ததாகும்.
“2025ஆம் ஆண்டு IMD உலக போட்டித் திறன் தரவரிசையில் மலேசியா 11 இடங்கள் முன்னேறி, 23வது இடத்தைப் பிடித்துள்ளது. இது 2020க்குப் பின் நாட்டிற்கான மிகச்சிறந்த நிலைபாடாகும்.” என்றார்.
உலகளாவிய சிக்கல்கள் அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டங்களை தாமதமாகும் காரணமாக இருக்கக்கூடாது.