கோலாலம்பூர், அக் 10 – 2026ஆம் ஆண்டில் நாட்டின் வருவாய் RM343.1 பில்லியனாக உயர்த்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
விரிவுபடுத்தப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரியின் முழுமையான அமலாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளால் இந்த உயர்வு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், முதலீட்டு வருவாய் குறைவதால் வரி அல்லாத வருவாய் RM72.7 பில்லியனாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தச் செலவினம் RM419.2 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (KDNK) 19.7 சதவீதமாக இருக்கும்.
இதில், செலவின நிர்வாகத்திற்கு RM338.2 பில்லியன் மற்றும் 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்காக வளர்ச்சிச் செலவினத்திற்கு RM81 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, அரசாங்கம் நிதிநிலையைப் பேணும் உறுதிப்பாட்டின் காரணமாக, நிதிப் பற்றாக்குறை 2026இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், நடுத்தர கால நிதி கட்டமைப்பு (MTFF 2026-2028) மூலம் 2028க்குள் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீத இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்த்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.