ஷா ஆலம், அக் 10 – குழந்தைகள் திடீரென அமைதியாக மாறுவது, சீக்கிரம் கோபப்படுவது அல்லது பள்ளிக்கு செல்ல மறுப்பது போன்ற மாற்றங்கள், சாதாரணமான விஷயங்களாகப் பெரும்பாலும் பெற்றோர் நினைப்பார்கள். ஆனால், இந்த மாற்றங்கள் குழந்தைகளிடையே நடக்கும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும்.
இப்போது குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் மனநல பிரச்சனைகள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால், பெரும்பாலானவர்கள் அதை சாதாரணமான ஒன்று என தவறாக புரிந்து கொள்கிறார்கள் என மருத்துவ மனநல நிபுணர் டாக்டர் சித்தி அமினா ஓமார் கூறினார்.
இந்த மன அழுத்தம் ஆரம்பத்தில் குழந்தைகளின் நடத்தையில் சிறிய மாற்றங்களாகவே தெரியும். பெற்றோர் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. ஏனென்றால், சீக்கிரம் கண்டறிந்தால், விரைவாக உதவி செய்ய முடியும்.
“பள்ளியிலிருந்து நிற்கும் குழந்தைகளை நாம் தானாகவே அணுக வேண்டும். அவர்களின் நடத்தை மாறுகிறதா என்று பெற்றோர் கவனிக்க வேண்டும்,” என டாக்டர் சித்தி அமினா கூறினார்.
இப்போது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றில் பாட சுமை, குடும்ப பிரச்சனைகள், சமூக ஊடகங்கள் ஆகியவை அடங்கும்.
இதில் பள்ளியின் பங்களிப்பும் முக்கியம். ஆனால், பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், ஆலோசகர்கள் மிகக் குறைவாக இருக்கின்றனர்.
“ஒரு பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் இருந்தாலும், இரண்டு ஆலோசகர்கள் தான் இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு அதிகமான வேலை இருப்பதனால், மாணவர்களின் மனநிலை சரியாக கவனிக்கப்படுவதில்லை,” என்று அவர் சொன்னார்.
அதனால், பள்ளிகளில் அடிக்கடி மனநல பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தார். இது மூலம், மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவியை வழங்கலாம்.
“மனநலம் நன்றாக இருந்தால், கல்வியிலும் மாணவர்கள் சிறந்த சாதனை படைப்பார்கள் என்றார் அவர்.
இது தவிர, பள்ளிகளில் தவறான நட்பு, போதைப்பொருள் பிரச்சனை ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றார்.