கோலாலம்பூர், அக். 10 - ஆசியான் நாடுகளுடனான நல்லுறவு தொடர்ந்து வலுவுடன் இருப்பதை உறுதி செய்ய புவிஅரசியல் நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.
துரித மாற்றங்களுக்கான ஆற்றலைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) விரைவாக மாறி வரும் உலகளாவிய பொருளாதார வடிவமைப்பு ஆகியவை எல்லை கடந்த உறவுகளை வலுப்படுத்துவற்கும் இலக்கவியல் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் ஆசியான் நாடுகளுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன என்று அவர் சொன்னார்.
எல்லை கடந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, இலக்கவியல் ஆற்றல் வளர்ச்சி மற்றும் சிறந்த வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியம்குறித்து ஆசியான் நாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தைகளில் வலியுறுத்தப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
உலக விநியோகச் சங்கிலியில் நமது இடத்தை இது உறுதி செய்யும். ஆகவே. வலுவான வட்டாரத்தை உறுதி செய்வதற்கு நீடித்த பொருளாதாரம் மற்றும் அணுக்கமான உறவுகளை வளர்ப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு 20215 சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 2025 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டில் (சிப்ஸ்) முக்கிய நிகழ்வாக இந்த சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாடு விளங்குகிறது.
ஆசியானின் தொடர்ச்சியான மற்றும் நீடித்த வளர்ச்சியில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் இங் தமதுரையில் வலியுறுத்தினார்.
இளம் தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை உள்ளடக்கிய ஆசியான் சமுகம் நமக்கு பலத்தைத் தருகிறது என அவர் குறிப்பிட்டார்.