கோலாலம்பூர், அக் 10 – தனியார் துறைகள் மற்றும் தொழில்துறை இயக்குநர்கள் தங்களின் வளாகங்களுக்குள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களை (Taska) அமைக்கும் நோக்குடன் ஒரு முன்மாதிரி திட்டத்தை சிலாங்கூர் மாநிலம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டம் எம்பிஐ என்ற அரசுத்துறையின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளதுடன், தற்போது அதன் அமலாக்கம் தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
“கடந்த ஆண்டில், குழந்தைகள் தொகை பெருமளவு உள்ள பகுதிகளில் – குறிப்பாக பெட்டாலிங் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு – இத்திட்டம் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஊக்குவிப்பாளர்களுக்கு முன்மாதிரியாக இருந்து, தங்களது பணியாளர்களின் குழந்தைகளுக்கான பராமரிப்பு வசதிகளை, நிறுவன வளாகத்திற்குள் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அமைக்கக் கூடிய முறையில் உருவாக்க சிலாங்கூர் எண்ணம் கொண்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிலாங்கூர் பன்னாட்டு பராமரிப்பு உச்சிமாநாடு (SICS) 2025 மற்றும் சிலாங்கூர் பன்னாட்டு வணிக உச்சிமாநாடு (SIBS) அதிகாரப்பூர்வ நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் போது அவர் கூறினார்.
அன்றைய அமர்வில் உரையாற்றிய அன்ஃபால் சாரி, சிறுவர் பராமரிப்பு மையங்களின் செயல்பாட்டாளர்களுக்கான நிதிசார் உதவிகளை அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
“மையங்களை நிர்வகிக்கின்ற செயற்பாட்டாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். கட்டணங்களை உயர்த்த முடியாத சூழ்நிலையால், வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. ஆனால், இந்த பராமரிப்பு துறையின் பொருளாதாரப் பயனளிப்பு திறன் மிகுந்தது.
“எனவே, செயற்பாட்டாளர்களின் நிதிச்சுமையை குறைப்பதற்காக, அரசு புதிய சிந்தனைகளுடன் கூடிய, மிகவும் பயனுள்ள கூடுதல் மானியத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்,” என அவர் குறிப்பிட்டார்.