இஸ்தான்புல், அக். 10 - காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வந்த போர் "முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டதாக" மத்தியஸ்தர்களிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் தாங்கள் உத்தரவாதங்களைப் பெற்றுள்ளதாக ஹமாஸ் நேற்று கூறியது.
இஸ்ரேலுடனான ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து முன்பே பதிவு செய்யப்பட்ட உரையில் ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யா அறிவித்ததாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுவது, ரஃபா எல்லைக் கடப்பு பாதையை மீண்டும் திறப்பது மற்றும் காஸாவிற்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள பெரிய அம்சம் கைதிகளின் விடுதலையாகும். இஸ்ரேலிய சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 250 பாலஸ்தீனர்கள் மற்றும் 2023 அக்டோபர் 7க்குப் பிறகு கைது செய்யப்பட்ட 1,700 பேருடன் அனைத்து சிறார் மற்றும் பெண்கள் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
எங்கள் சகோதரர்களிடமிருந்தும் மத்தியஸ்தர்களிடமிருந்தும், அமெரிக்க நிர்வாகத்திடமிருந்தும் நாங்கள் உத்தரவாதங்களைப் பெற்றுள்ளோம். இவை அனைத்தும் போர் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்று அல்-ஹய்யா கூறினார்.
எஞ்சியுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்தவும் பாலஸ்தீன நலன்களைப் பாதுகாக்கவும் சுயநிர்ணய உரிமை மற்றும் ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர அரசை நிறுவவும் ஹமாஸ் தேசிய மற்றும் இஸ்லாமிய பிரிவுகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.
காஸாவிற்கான 20 அம்ச போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிட்டார்
அதில் சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிப்பது, நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் முழு காஸா பகுதியிலிருந்தும் இஸ்ரேலிய படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.
காஸாவில் முழுமையான போர் நிறுத்தம் தொடர்பில் உத்தரவாதம் பெற்றதாக ஹமாஸ் அறிவிப்பு
10 அக்டோபர் 2025, 3:52 AM