கோலாலம்பூர், அக் 10 – இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நான்காவது மாடாணி பட்ஜெட் வெறும் எண்ணிக்கைகள் மற்றும் செலவீனங்களை மட்டுமேக் கொண்டதாக அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதுவே அரசாங்கம் மக்களுக்குத் தொடர்ந்து உதவ ஒரு நீண்டகாலத் திசைகாட்டியாக அமையும் என்றும், அதேசமயம் நாட்டின் கடன் சுமையை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் விளக்கினார்.
“மாடாணி 2026 வருவாய் திட்டத்தின் நேரலை ஒளிபரப்பை அனைத்து தொலைக்காட்சிச் சேனல்கள் மற்றும் முக்கியமான இணையதளத் தளங்களில் காணலாம்,” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராகவும் உள்ள அன்வார் இன்று பிற்பகல் 4 மணிக்கு 2026ஆம் ஆண்டுக்கான வருவாய் திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
இது, அவரது தலைமையிலான மாடானி அரசாங்கத்தின் நான்காவது வருவு / செலவு திட்டமாகும். மேலும், இது மலேசியாவின் 13 ஆம் திட்டத்தின் (Rancangan Malaysia Ke-13) கீழ் முதன்முதலாக முன்வைக்கப்படும் வருவாய் திட்டமாக உள்ளதால், ஐந்தாண்டு காலத்தில் நாட்டின் வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முக்கியக் குறிகோளாக அமையப்போகிறது.
இந்த நான்காவது மாடாணி வருவாய் திட்டம் மக்களின் நலனை பாதுகாப்பது, தேசிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது மற்றும் நீடித்த, உள்ளடக்கிய வளர்ச்சி அடித்தளத்தை நிலைநாட்டுவது ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது என புத்ராஜெயாவில் புதன்கிழமை அன்று ஊடகத் தலைவர்களுக்காக நடத்தப்பட்ட முன்னோட்டக் கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட கால அட்டவணையின்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வருவாய் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட பின், கொள்கை நிலை விவாதத்திற்கு எட்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், ஒவ்வொரு அமைச்சும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை தங்களது பதில்களை வழங்கும். தொடர்ச்சியாக, நவம்பர் 5 முதல் 27 வரை குழுநிலை விவாதங்கள் நடைபெற்று, மசோதாவிற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் பெறப்படும்.