கோலாலம்பூர், அக். 10 - சிலாங்கூரில் உள்ள அறுபது விழுக்காட்டு ஆறுகளில் நீரின் தரம் 4 முதல் 3 வரை உயர்வு கண்டுள்ளது. மாநில அரசின் 30 லட்சம் வெள்ளி வருடாந்திர ஒதுக்கீடே இந்த மாறுதலுக்கு காரணம் என்று சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியத்தின் (லுவாஸ்) தலைமை உதவி இயக்குநர் ஹஸ்லினா அமிர் தெரிவித்தார்.
தரம் 4 என்பது பாசனத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மோசமான தரம் கொண்ட நீரைக் குறிக்கும். அதே வேளையில் தரம் 3 தண்ணீரை பொழுதுபோக்கு போன்ற நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
இதுவரை 16 ஆறுகள் இதில் ஈடுபட்டுள்ளன. மேலும் சுங்கை கோங், சுங்கை செம்பா, சுங்கை டாமன்சாரா, சுங்கை லங்காட் மற்றும் சுங்கை செமினி உள்ளிட்ட துணை ஆறுகளில் மறுசீரமைப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. பயன்படுத்தப்படும் நுட்பங்களில் உயிரியல் மறுசீரமைப்பு அடங்கும் என்று சிலாங்கூர் முதலீடு மற்றும் தொழில்துறை பூங்கா கண்காட்சியில் (ஸ்பார்க்) நடைபெற்ற பகிர்வு அமர்வின் போது அவர் கூறினார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும்
சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (சிப்ஸ்) ஆதரவின் இந்த கீழ் ஸ்பார்க் நிகழ்வு நடைபெறுகிறது.
சிலாங்கூரில் நீர் வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்ட சுழியம்-வெளியேற்றக் கொள்கையை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் லுவாஸ் தொடங்கிய வெற்றிகரமான உயிரியல் மறு சீரமைப்பு முன்னோடித் திட்ட இடங்களில் ஒன்றாக ரவாங்கில் உள்ள சுங்கை கோங் ஆறு உள்ளதாக அவர் கூறினார். 5.6 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆற்றை உட்படுத்திய இத்திட்டம் 24 லட்சம் வெள்ளி செலவை உள்ளடக்கியுள்ளது.
சிலாங்கூரிலுள்ள 60 விழுக்காடு ஆறுகளில் நீரின் தரம் உயர்வு
10 அக்டோபர் 2025, 2:06 AM