கோலாலம்பூர், அக். 10 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று மாலை 4.00 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்யவிருக்கிறார்.
பிரதமரின் தலைமையிலான மடாணி அரசாங்கம் தாக்கல் செய்யும் நான்காவது வரவு செலவுத் திட்டமாகவும் 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டமாகவும் இது விளங்குகிறது.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை அமல்படுத்தக்கூடிய அடித்தளமாக இந்த வரவு செலவுத் திட்டம் கருதப்படுகிறது.
இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டிலுள்ள தொலைக்காட்சி நிலையங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பெர்னாமா டிவி உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், வரவு செலவுத் திட்ட தாக்கல் நிகழ்வை முன்னிட்டு சிறப்பு கண்ணோட்ட நிகழ்வும் மாலை 3.00 மணிக்கு இடம் பெறும்.
2026 வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சின் அகப்பக்கம் வாயிலாகவும் ஒளிரப்பப்படும் என்று நிதியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது. முந்தைய மடாணி வரவு செலவுத் திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட வலுவான கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட 2026 வரவு செலவுத் திட்டம் அமையும் என அது குறிப்பிட்டது.
நாட்டின் வளர்ச்சி உச்சவரம்பு, மக்களின் வாழ்க்கை நிலை அடிப்படையை உயர்த்தவது, சிறப்பான நிர்வாகம் மற்றும் பொதுச் சேவைத் துறை சீர்திருத்தம் ஆகிய மூன்று அடிப்படைக் கூறுகளை 2026 வரவு செலவுத் திட்டம் கொண்டுள்ளது.
நிச்சயமற்ற உலகளாவிய நிலை மற்றும் அதிகரித்து வரும் போட்டித் தன்மை ஆகியவற்றுக்கு மத்தியில் நீண்ட கால அடிப்படையிலான பொருளாதார பணிநிரல், வளர்சியை தக்க வைத்துக் கொள்வது மற்றும் நாட்டின் பொருளாதார ஆற்றலை பாதுகாப்பதில் இந்த வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும்.