கோலாலம்பூர், அக் 9 – முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு பாடத்திட்டங்களை மாநிலத்தின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில சமூகநலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் சாரி கூறினார்.
இந்த முன்மொழிவு பராமரிப்பு துறையில் பணிபுரியும் தொழில்துறை நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது.
“நான் இந்த பராமரிப்பு பாடத்திட்டத்தை Universiti Selangor (Unisel) மற்றும் Selangor Technical Development Centre (STDC) ஆகியவற்றில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். Unisel-ல் தற்போது பராமரிப்பு நிபுணத்துவம் சார்ந்த பாடங்கள் உள்ளன, ஆனால் இதை பராமரிப்பு துறையிலும் விரிவாக்க விரும்புகிறோம். அதேபோல் STDC-யில் கார் அல்லது ஏர் கண்டிஷனர் பழுது பார்க்கும் பாடங்கள் மட்டுமல்லாமல், முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு துறைகளையும் சேர்க்க விரும்புகிறோம்,” என அவர் கூறினார்.
குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான பராமரிப்பு ஒரு பெரிய தொழில் வாய்ப்பாக இருக்கிறது, ஆனால் இதற்கான சான்றிதழ் அல்லது அங்கீகாரம் பெறுவது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்று அவர் கூறினார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூராட்சி அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தி, குடியிருப்பு பகுதிகளில் பராமரிப்பு மையங்களைத் தொடங்குவது குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பராமரிப்பு மையமும் திறக்கப்படும் முன், அதற்கான அனுமதி ஊராட்சி மன்றங்களிடமிருந்தும், அப்பகுதி குடியிருப்பாளர்களிடமிருந்தும் பெறப்பட வேண்டும். சிலர் இத்தகைய மையங்கள் சத்தமாக இருக்கும் என எண்ணுகிறார்கள், அந்த மனப்போக்கை மாற்ற வேண்டும். எனவே, இதற்கான சட்டம் மற்றும் விதிமுறைகளில் மாற்றம் செய்து, பராமரிப்பு மையங்களுக்கு உரிய உரிமம் வழங்குதல் வேண்டும் என அவர் கூறினார்.