ஜார்ஜ் டவுன், அக் 9 – பினாங்கு நுகர்வோர் சங்கம் (CAP) அரசு வரும் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் புகையிலைப் பொருட்களுக்கு அதிக விற்பனை வரி விதிப்பதை பரிசீலிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. இது புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைத்து, பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று CAP தெரிவித்துள்ளது.
CAP கல்வி அதிகாரி சுப்பாராவ் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்படவில்லை. கடைசியாக 2018ஆம் ஆண்டு புகையிலைப் பொருட்களுக்கு விற்பனை வரி விதிக்கப்பட்டது என்றார்.
“ஒரு புகையிலைப் பிடிப்பவர் மாதம் சுமார் RM500 வரை செலவழிக்கின்றனர். அதனால், தற்போது நாட்டில் சுமார் ஐந்து மில்லியன் புகையிலைப் பிடிப்பவர்கள் உள்ள நிலையில், 2026 பட்ஜெட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கட்டாய விற்பனை வரி விதிப்பது அரசின் புகையிலைப் பிடிப்பை குறைக்கும் முயற்சிக்கு உதவியாக இருக்கும்,” என்றார் அவர்.
மேலும் விலை அதிகமானால் புகையிலைப் பொருட்கள் எளிதில் வாங்க முடியாத நிலைக்கு மாறும். இது மொத்தப் பயன்பாட்டை குறைக்கும்; ஏற்கனவே புகைபிடிக்கும் நபர்கள் நிறுத்தவோ அல்லது குறைக்கவோ தூண்டப்படுவார்கள். மேலும், இளைஞர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தொடங்குவதையும் தடுக்கும்,” என்றார்.
அதே நேரத்தில், புகையிலை வரி மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய், மலேசியர்களை புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சுகாதார முயற்சிகளை ஆதரிக்கப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் நலனில் அக்கறை கொண்ட மடாணி அரசு, பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில், 2026 பட்ஜெட்டில் புகையிலை வரி குறித்து ஒரு நல்ல அறிவிப்பை வழங்குவார் என CAP நம்புகிறது,” என்றார் அவர்.