ஷா ஆலம், அக். 9 - அனைத்துலக கால்பந்து சங்க சம்மேளனத்தால் (ஃபீஃபா) தண்டிக்கப்பட்ட ஹரிமாவ் மலாயா கால்பந்து விளையாட்டாளர்கள் எழுவரும் கூட்டரசு அரசியலமைப்பின் விதிகளின்படி அனைத்து குடியுரிமைத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளனர்.
அனைத்து வீரர்களின் விண்ணப்பங்கள் தொடர்பில் 19 மற்றும் ப 20(1)(சி) பிரிவுகளின்படி அமைச்சர் விருப்புரிமை அதிகாரங்களைப் பயன்படுத்தலாம் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இந்த ஏழு விளையாட்டு வீரர்களும் அரசியலமைப்பின் பிரிவு 19 இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கோட்பாடுகளுக்கு இணங்குகிறார்கள். அதாவது விண்ணப்பதாரர் தாங்களாகவே (ஒரு முகவரைப் பயன்படுத்தாமல்) விண்ணப்பிக்க வேண்டும், நல்ல நடத்தை மற்றும் வசிப்பிடத் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் மலாய் மொழியைப் பற்றிய போதுமான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும் ஆகியவையே அந்த மூன்று கோட்பாடுகளாகும் என அவர் சொன்னார்.
இத்தகைய விண்ணப்பங்கள் 1964 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் மற்றும் ஃபீஃபா சட்டங்கள் மூலமாகவும் பரிசீலிக்கப்படுகின்றன.
இந்த செயல்முறை மிகவும் முழுமையானது என்பதோடு ஃபீஃபா உடனான அவர்களின் தகுதி மலேசிய கால்பந்து சங்கம் மற்றும் ஃபீஃபா தொடர்புடையது என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
கடந்த 2018 முதல் குடியுரிமை பெற்ற வீரர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் அரசு அல்லது கால்பந்து சங்கம் தீர்மானிக்கும் குடியுரிமை விண்ணப்பத்திற்கு பயன்படுத்தப்படும் தகுதி மற்றும் அளவுகோல்கள் குறித்து கங்கார் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் ஜாக்ரி ஹாசன் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
விளையாட்டாளர்களின் அசல் பதிவு ஆவணங்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்த பின்னர் கால்பந்து சங்கம் மற்றும் ஏழு ஹரிமாவ் மலாயா பாரம்பரிய வீரர்களுக்கு எதிரான தண்டனை முடிவின் முழு விவரங்களையும் ஃபீஃபா நேற்று வெளியிட்டது.
கேப்ரியல் பெலிப் அரோச்சா, ஃபாகுண்டோ டோமாஸ் கார்செஸ், ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்கடோ, இமானோல் ஜேவியர் மச்சுகா, ஜோவா விட்டோர் பிராண்டாவோ ஃபிகியூரிடோ, ஜான் இரசாபல் இரௌர்குய் மற்றும் ஹெக்டர் அலெஜான்ட்ரோ ஹெவெல் ஆகியோரே அந்த ஏழு விளையாட்டாளர்களாவர்.
இதனைத் தொடர்ந்து மலேசிய கால்பந்து சங்கத்திற்கு 1.8 லட்சம் வெள்ளியும் ஒவ்வொரு வீரருக்கும் தலா 10,000 வெள்ளியும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், எந்தவொரு கால்பந்து நடவடிக்கையிலும் ஈடுபட 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது.