பெட்டாலிங் ஜெயா, அக் 9 - இந்திய கலைஞர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி விரிவுப்படுத்த உதவும் நோக்கத்தில் MYCREATIVE VENTURE நிறுவனம் (MyCv) பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. அதற்கு விண்ணப்பிக்க இன்னும் அதிகமான கலைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மானியங்கள், நிதியுதவி மற்றும் MyCV கடனுதவி திட்டம் வாயிலாக அரசாங்கம் படைப்புத் துறையைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.
இருப்பினும், மொத்த பெறுநர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்திய சமூகத்தின் ஈடுபாடு இன்னும் குறைவாகவே உள்ளதாகத் தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
"இந்த திட்டத்தின் மூலம் மானியங்கள் நிதி உதவிகள் மற்றும் கடன்கள் படைப்பாற்றல் துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், இசைக்கலைஞர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மின்னியல் உள்ளடக்க உருவாக்குநர்களையும், MyCV ஆதரித்து வருகிறது.
இத்திட்டம் படைப்பாற்றலை வளர்ப்பதோடு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, மலேசியர்களை உள்நாட்டிலும், உலகளாவிய நிலையிலும் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்குகின்றது," என்று தியோ நீ சிங் கூறினார்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் MyCV நிர்வகிக்கும் படைப்பாற்றல் உள்ளடக்க நிதி DKK வழியாக 234 பெறுநர்கள் பயனடைந்துள்ளனர்.
அவற்றில், 206 பெறுநர்கள் தீபகற்பத்தைச் சேர்ந்தவர்கள் சபாவில் இருந்து 16 பேரும் சரவாக்கில் இருந்து 12 பேரும் அந்நிதியைப் பெற்றுள்ளனர்.
இந்தியர்களுக்குச் சொந்தமான எட்டு நிறுவனங்கள் மட்டுமே மொத்தம் 7 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளன.