மணிலா, அக் 9 — கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 30) மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியை தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதாகப் பிலிப்பைன்ஸ் தேசிய பேரிடர் மேலாண்மை மன்றம் (NDRRMC) இன்று தெரிவித்துள்ளது.
சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சிபூ மாகாணம் அருகே கடலுக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 559 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் 189,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை, அதாவது சுமார் 666,000 கிராமவாசிகளை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள் ஆகியவற்றில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கவியல் மற்றும் எரிமலையியல் நிறுவனம் தொடர்ந்து சிறு சிறு நிலநடுக்கங்களைப் பதிவு செய்து வரும் நிலையில், மக்கள் பலர் தற்காலிகமாக சாலைகளில் மற்றும் திறந்தவெளிகளில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் தங்கியுள்ளனர்.