கோலாலம்பூர், அக் 9: நாட்டிலுள்ள இந்திய வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களுக்கு உதவும் நோக்கத்திலும் சூரியன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சூரியன் திட்டத்திற்காக 54.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர், கூட்டுறவு துறை மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
இந்த திட்டமானது இந்திய சமூகத்திற்கும் இந்திய தொழில்முனைவோர்களுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாகும் என்று துணை அமைச்சர் கருத்துரைத்தார்.
பெர்னாஸ் உடன் தேசிய உரிமையாளர் சுற்றுச்சூழல் அமைப்பில் மிகவும் வெற்றிகரமான இந்திய சமூக தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான இந்திய சமூக அடிப்படையிலான உரிமையாளர் முயற்சியான சூரியன் திட்டத்தை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக சொன்னார்.

இந்த திட்டம் நாடு முழுவதும் 1,000 பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் 20 வருங்கால பிரான்சாய்ஸ் வர்த்தகர்கள், 100 வருங்கால உரிமையாளர்கள், 400 சிறு தொழில்முனைவோர், 500 வேலை வாய்ப்பு பங்கேற்பாளர்கள் ஆகியோர் அடங்குவர். இதற்காக 54.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
இந்திய சமூகத்திலிருந்து உரிமையாளர் வணிகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், வழிகாட்டுதல், பயிற்சி மூலம் தொழில்முனைவோரை மேம்படுத்துதல், உரிமையாளர் நிதியுதவிக்கான அணுகலை வழங்குதல், ஏற்கெனவே உள்ள உரிமையாளர்களுடன் மூலோபாய போட்டிகள் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் இந்த சூரியன் திட்டத்தின் இலக்காகும்.

மேலும் பிரான்சைஸ் அடிப்படை பயிற்சி, ஹலால் விழிப்புணர்வு பயிற்சி, தொழில்துறை வேலைவாய்ப்பு, பிரான்சைசர் மேம்பாடு, நிதியுதவியும் வழங்கப்படும் என்று துணையமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். இரு வருடங்கள் மேற்கொள்ளப்படும் இந்த சூரியன் திட்டமானது ஜனவரி 1 2026 முதல் 31 டிசம்பர் 2027ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும்.
இன்று தொடங்கி சூரியன் திட்டத்திற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ள ஆர்வமுள்ள இந்திய வணிகர்கள் https://www.pernas.my/ms பெர்னாஸ் அகப்பக்கத்தை வலம் வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.