கோலாலம்பூர், அக். 9 - மியன்மார் நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் சகாக்களுடன் கலந்துரையாடல் நடத்துவதற்காக
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் இன்று மியான்மர் புறப்பட்டார்.
மியான்மர் அதிபர் உயர்நிலை ஜெனரல் மாஹ் (மின் ஆங் ஹ்லைங்), பிரதமர் யு நியோ சா மற்றும் வெளியுறவு அமைச்சர் யு தான் ஸ்வே ஆகியோரைச் சந்திப்பதற்காக அந்நாடு செல்கிறேன் என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட அந்நாட்டிற்கான முகமதுவின் வருகை சமீபத்தில் நடந்த போர்நிறுத்த மீறல் தொடர்பானது ஆகும். இது சமாதானத் திட்ட முயற்சிகளை சீர்குலைத்துள்ளதோடு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த முகமதுவின் மியான்மர் பயணம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைக்கப்பட்டதை வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) முன்னதாக உறுதிப்படுத்தியது.
இதற்கிடையில், முகமது மியான்மர் தலைநகர் நே பி தாவுக்கு ஒரு நாள் பணி நிமித்தப் பயணத்தை மேற்கொள்வதை இன்று ஒரு அறிக்கையில் அமைச்சு உறுதிப்படுத்தியது.
இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெற்ற 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவுக்கேற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.
முகமதுவுடன் ஆசியான் தலைவரின் மியான்மருக்கான சிறப்புத் தூதர் டான் ஸ்ரீ ஓத்மான் ஹாஷிமும் இப்பயணத்தில் இடம் பெற்றுள்ளார்.
இந்தப் பணி நிமித்தப் பயணத்தின் போது அவர் மியான்மரின் மாநிலப் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவர் உயர்நிலை ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் மற்றும் பிரதமர் மற்றும் தேசிய திட்டமிடல் அமைச்சர் யு நியோ சா ஆகியோரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க உள்ளார்.
வெளியுறவு அமைச்சர் முகமது மியன்மார் பயணம் - உயர்மட்டத் தலைவர்களை சந்திப்பார்
9 அக்டோபர் 2025, 6:26 AM