ஷா ஆலம், அக். 9 - அனுமதிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையில் அதாவது 48 பயணிகளை ஏற்றி வந்த படகை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (ஏ.பி.எம்.எம்.) நேற்று தடுத்து வைத்தது.
வட மேற்கே 0.4 கடல் மைல் தொலைவில் பூலாவ் கெத்தாம் அருகே அந்த படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக சிலாங்வர் மெரிடைம் இயக்குநர் கேப்டன் மெரிடைம் அப்துல் முஹைமின் முகமது கூறினார்.
பூலாவ் கெத்தாம் படகுத் துறையில் அதிக பயணிகளை ஏற்றிய படகு காணப்பட்டது தொடர்பில் பொது மக்களிடமிருந்து நேற்று பிற்பகல் 1.55 மணிக்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து தனது தரப்பினர் அந்த படகை தடுத்து நிறுத்தியதாக அவர் சொன்னார்.
அந்த படகு மூன்று உள்நாட்டினரால் இயக்கப்பட்டது சோதனையில் கண்டறியப்பட்டது. 63 வயது ஆடவர் அப்படகைச் செலுத்திய வேளையில் 33 மற்றும் 59 வயதுடைய இருவர் அதில் சிப்பந்திகளாக இருந்தனர் என்று அவர் சொன்னார்.
அந்த படகில் 48 பயணிகள் இருந்தனர். நடத்துனருக்கான லைசென்சில்
குறிப்பிடப்பட்ட பயணிகள் எண்ணிக்கையை விட இது 12 பேர் அதிகமாகும். இது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. விபத்து அல்லது விரும்பத்தகாத சம்பவம் நிகழும் பட்சத்தில் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த பயணிகள் படகும் அதன் பணியாளர்களும பூலாவ் இண்டாவில் உள்ள கடல் போலீஸ் துறை படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்டு ஏ.பி.எம்.எம். விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த வழக்கு 1952ஆம் ஆண்டு வணிகக் கப்பல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.