கோலாலம்பூர், அக். 9 - வாகன டயர்களை கடத்தியது மற்றும் போலி ஏற்றுமதி, இறக்குமதி
ஆவணங்களைப் பயன்படுத்தியதாக நம்பப்படும் நிறுவனங்கள் மீது கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) 16 நிறுவனக் கணக்குகள் மற்றும் 25 தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் உள்பட 7 கோடி வெள்ளி மதிப்புள்ள 41 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
அரச மலேசிய சுங்கத் துறை, உள்நாட்டு வருமான வரி வாரியம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவை சம்பந்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த 'ஓப் கிரிப்' நடவடிக்கையில் ஏறக்குறைய 1.3 கோடி வெள்ளி மதிப்புள்ள நான்கு அசையா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுவரை, இரண்டு நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக எம். ஏ.சி.சி. கூறியது. மேலும், அங்கீகரிக்கப்படாத வர்த்தகர்களிடமிருந்து கொள்முதல் செய்தல் மற்றும் ஸ்டிக்கர் மோசடியும் இதில் அடங்கும்.
கடத்தப்பட்ட டயர்கள் புதியவை என்று கண்டறியப்பட்டது. ஆனால், அவற்றில் ஸ்டிக்கர் மோசடி மற்றும் பார் குறியீட்டை சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேலும் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதாகவும் என்று நேற்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அந்த வட்டாரம் கூறியது.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பான நிர்வாக விசாரணை அறிக்கையை எம்.ஏ.சி.சி திறந்துள்ளதாக அதன் துணைத் தலைமை ஆணையர் (தடுப்பு) டத்தோ அஸ்மி கமருஸமான் தெரிவித்தார்.
இந்த டயர்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதும் பயனீட்டாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கடத்தல் அல்லது அங்கீகரிக்கப்படாத இறக்குமதி கூறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த டயர்களை வாங்குவது தொடர்பான ஆவணங்கள் குறித்து புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார்.