இஸ்தான்புல், அக் 9 - அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காஸா போர்நிறுத்தம் மீதான முதல் கட்டத் திட்டத்திற்கு தாங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இன்று அதிகாலை அறிவித்தது.
அதே நேரத்தில் தனது இந்த முயற்சிக்கு ஆதரவளித்த துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைப் பாராட்டுவதாக டிரம்ப் கூறியதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, ஆக்கிரமிப்புப் படைகளை திரும்பப் பெறுவது, மனிதாபிமான உதவிகளை அறிமுகப்படுத்துவது மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வது ஆகியவை தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக
டெலிகிராம் செயலியில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஹமாஸ் தெரிவித்தது.
கத்தார், எகிப்து மற்றும் துருக்கியில் மத்தியஸ்தராக செயல்பட்ட எங்கள் சகோதரர்களின் முயற்சிகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.
போரை முடிவுக்கு கொண்டு வந்து காஸா தீபகற்பத்திலிருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் முயற்சிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஒப்புக்கொண்டபடி அதன் பொறுப்புகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நாடுகளான அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளையும் டிரம்ப் உட்பட சர்வதேச சமூகத்தையும் ஹமாஸ் கேட்டுக்கொள்கிறது.
எங்கள் மக்களின் தியாகங்கள் வீண் போகாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். நாங்கள் எப்போதும் எங்கள் வாக்குறுதிகளில் உறுதியாக இருக்கிறோம். சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை போன்ற நமது தேசிய உரிமைகளை தியாகம் செய்ய மாட்டோம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா முன்மொழிந்த காஸா அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் கையெழுத்திட்டதாக டிரம்ப் அறிவித்த சிறிது நேரத்தில் ஹமாஸின் அறிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 67,200 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.



