கோலாலம்பூர், அக். 9 - மலேசியாவின் பொருளதாரத்தின் முதன்மை உந்து சக்தி என்ற கௌரவத்தினால் இனியும் மனநிறைவு கொண்டிருக்க மலேசியா விரும்பவில்லை.
உள்நாட்டு அடைவு நிலையைத் தாண்டி 68 கோடி மக்கள் தொகை கொண்ட ஆசியான் சந்தையில் கிடைக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொள்ளும் வகையில் புதிய தொலைநோக்குத் திட்டத்தை மாநில அரசு வரைந்துள்ளது.
நேற்று இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2025 சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் (சிப்ஸ்) தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநில அரசு மெத்தனமாக இருக்க முடியாது என்பதோடு நிச்சயமற்ற உலக பொருளாதாரச் சூழலில் தொடர்ந்து முன்னிலை வகிக்க தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிலாங்கூர் அரசு இரண்டு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தவுள்ளது. இரயில் மற்றும் ஆயுள் அறிவியல் ஆகியவையே அவ்விரு துறைகளாகும். அவ்விரு துறைகளும் முக்கியமானவையாகும்.
ஒன்று பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிப்பதையும், இரண்டாவது வயது முதிர்ந்த சமுதாயத்தை எதிர்கொள்வற்கு தயார் படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன.
இந்த நான்கு நாள் மாநாட்டை மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மாநிலத்தின் முதலீட்டு மற்றும் தொழிலியல் மேம்பாட்டில் புதிய வடிவமைப்பைக் கொண்டு வரக்கூடிய இரு முதன்மைக் கொள்கைகளை ராஜா மூடா இந்நிகழ்வில் தொடக்கி வைத்தார்.
இதில் முதன்மைக் கொள்கை எஸ்.ஏ.ஜி.இ. எனப்படும் சிலாங்கூர் பசுமை பொருளாதாரத்திற்கான திட்ட நிகழ்ச்சி நிரலாகும். சுத்தமான எரிசக்தி, வட்டப் பொருளாதாரம், பசுமை இயக்கம், ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று தொகுதி கட்டமைப்பாக இது விளங்குகிறது.
இரண்டாவது கொள்கையான ஸ்பீட் சிலாங்கூர் உள்ளுர் அதிகாரிகளிடமிருந்து முதலீட்டு ஒப்புதல்களைப் பெறுவதற்கு நடப்பிலுள்ள 3.5 மாத கால அவகாசத்தை வெறும் ஒன்பது நாட்களாக விரைவுபடுத்துவதன் மூலம் நிர்வாக நடைமுறை இடர்பாடுகளை குறைக்க உதவுகிறது.